இலங்கையில் வேரூன்றியிருக்கும் பாரியளவிலான ஊழலைத் தடுப்பதற்கான விரிவான நடவடிக்கையை ஆரம்பிக்க நியாயமான சமுதாயத்திற்கான தேசிய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கரு ஜயசூரிய நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதற்கான திட்டங்கள் இந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கான முன்வரிசைக் குழுவொன்று ஏற்கனவே பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய தில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க இந்த குழுவின் தலைவராக உள்ளார்.
முதற்கட்டமாக, அந்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த, ஊழல் தடுப்புச் சட்டத்தில் புதிய முன்மொழிவுகளை அரசாங்கம் ஏற்கனவே கொண்டு வந்துள்ளது. மேலும் ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்படும் இரண்டு நிறுவனங்களை குறிவைத்து செயல் திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அண்மைக்காலமாக நாட்டில் இடம்பெற்ற பத்து பாரிய ஊழல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் அனைத்தையும் டிசம்பர் மாதத்தின் முதல் சில நாட்களில் நாட்டுக்கு வெளிப்படுத்த கரு ஜயசூரிய எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.